Friday, August 28, 2015

மனித உற/உணர் வுகள் - ஒரு நொடி பிரதிபலிப்பு

திர்க்கக்கர வாமன மூர்த்தி கோவிலில் ஓணம் மிக சிறப்பு.  அத்தம் ( ஆவணி ஓன்று )  தொடர்ந்து பத்து நாட்கள் கொண்டாட்டம். மகாபலி மன்னன் வருகைக்காக எங்கும் பூக்களம் ( பூக்கள் கொண்ட  கோலம்) தினமும் ஒண சத்யா (விருந்து சாப்பாடு  ) பாயசத்துடன். பள்ளிகள் கல்லூரிகள் எல்லாம் பத்து நாட்டகள் விடுமுறை. ஊட்டு பிரையில் ( சாப்பிடும் இடம் ) 11.30 மணிக்கே கூட்டம் கூட தொடங்கி விடும். எங்கும் குழந்தைகள் இளைஞர்கள் முதியோர்கள் கலகல என வந்து சாப்பிட்டு விட்டு போவார்கள் .

நான் வரிசயில் நிற்கும் போது அங்கே வரும் குழந்தைகளை ( கை குழந்தை முதல் 12 அல்லது 13 வயது வரை ) நோக்குவது உண்டு. அவர்களை காணும் போது மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி. அவர்களோடு நான் இருப்பது போல எனக்கும் சந்தோசம் தொத்தி கொள்ளும். என் கண்ணிலிருந்து மறையும் வரை பார்ப்பேன். அவர்களது சின்ன சின்ன உணர்வுகள் எனக்குள்ளும் வந்து விடும்.

ஒரு பெண்  கை குழந்தை ஒன்றோடு வந்தாள். அவளது தாயும் மற்றும் குடும்பத்தினர் வரிசையில் நின்றனர். இங்கே ஒரு பழக்கம் உண்டு அதாவது கை குழந்தையோடு வரும் தாயையும் வயதான அம்மையையும் அப்பனையையும் நிற்க விடாமல் உடனே உள்ளே அழைத்து உட்கார சொல்வர். அப்படி உட்கார்ந்த பெண்ணை ஒரு கணம் நோக்கிவிட்டு என் பார்வை அந்த குழந்தையிடம் சென்றது. 

அது ஒரு ஆண் குழந்தை ஐந்து அல்லது ஆறு மாதம் இருக்கும். கால்களில் சாக்ஸ் மற்றும் இடுப்பில் டயாபர் அதன் மேல் கால் சட்டை. கொஞ்சம் கரு நிறம் கண்களில் மை மெலிந்த உடல் வாகுடன் இருந்தான். மற்ற குழந்தைகள் போல் இல்லாமல் அமைதியாக இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான் ஒரு நொடி பொழுதில் எங்களுக்குள்  கண் தொடர்பு ஏற்பட்டது. நான் ஒன்றும் அறியா ஒரு சிறு குழந்தையை அங்கு பார்க்கவில்லை ஒரு அமைதியான ஆன்மாவை பார்த்தேன். 

பின் அவன் தன்  இருகைகளையும் பிணைத்து பெருவிரல்களை நிதானமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். இவ்வளவு அமைதியாய்  சிந்தனையில் அவன் ஏன் இருந்தான் தெரியவில்லை. நானும் சிந்தித்து கொண்டிருந்தேன். அவர்களை  உட்கார வைத்தவர் உடனே போய் ஒரு தட்டில் சுட சுட  சத்யா கொண்டு வந்து  அருகில் உள்ள ஒரு நாற்காலியில் வைத்து விட்டு போனார். 

அவள் ஒன்றிரண்டு பருக்கைகளை கையில் எடுத்து ஒரு துளி சாம்பாரோடு பிசுக்கி சிந்தனயில் இருந்த மகன் வாயில்  வைத்தாள். சட்டென்று ஒரு நொடியில்  சுயநினைவுக்கு வந்தவன் முகம் சுளித்தான் யாரடா இது என்பது போல. சுளித்து கொண்டிருக்கும் போதே அவன் தாயை நிமிர்ந்து பார்த்தான் அந்த ஒரு கணத்தில் அவன் முகம் மலர்ந்தது. கொள்ளை அழகாக இருந்தது பார்ப்பதற்கு. அட நீதானா என்பது  போல. இருவர் முகத்திலும் புன்சிரிப்பு. 

அப்போது எனக்கு மனதில் தோன்றியது......
குழந்தைக்கும் தாய்க்கும் நடுவில் இருக்கும் இந்த ஆன்மாவின் தொடர்பு மிகவும் புனிதமானது. இது  பெண்களாய் ஜனித்தவர்களுக்கு  கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.




  


படம் : உபயம் - கூகிள் ( சொல்லப்பட்ட சம்பவத்திற்கு  பொருத்தமானது) 

Sunday, August 23, 2015

ஆன்மாவின் பயணம் - பாகம் இரண்டு





ஆன்மாவின் பயணம் பாகம் ஓன்று எழுதியபோது அதற்கு இவ்வளவு ஆதரவும் கருத்து வேறுபாடுகளும்  இருக்கும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை.... பல வழிகளிலும் கருத்துக்களை சொன்ன உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விமர்சகர்கள் இருந்தால் தான் நாம் செய்வது சரியா தவறா என்று ஒரு முறை நமை நாமே திரும்பி பார்த்துக்கொள்ள  முடியும்.

இந்த ஆன்மாவின் பயணத்தில்  என் மனதுக்கு ஒத்து போகின்ற கருத்துகள் மட்டுமே நான் எழுதுகிறேன். இதில் உள்ளவை உங்கள் உணர்வோடு முழுவதும் ஒத்திசைந்து போக வாய்ப்பில்லை. ஏனென்றல் ஒவ்வொரு ஆன்மாவின் பயணமும் வேறு வேறாக இருக்கும். நாம் சில பாதைகளில் ஒன்றாக பயணித்திருக்கலாம் . உங்கள் மனதோடு   ஒத்திசைந்து போகின்றனவைகளை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். ஒத்து போகதவைகளை பற்றி நாம் விவாதிக்கலாம்.

ஆன்மாவுக்கு ஜாதி மதம், இனம் எதுவும் இல்லை. ஒரு சிறிய அணுவாய் ஜனித்து பின் கிருமியாய், புல்லாய் , புழுவாய் எல்லாமாகி பின் மனிதனாய் பால முறை பிறந்தவனுக்கு ஏது ஜாதி மதம் இனம். "நமக்குளே எல்லாமும் எல்லாவற்றிலும் நாமே". தோழர் தி.தமிழ் இளங்கோ அவர்கள் சுட்டிக்காட்டிய பட்டினத்தார் பாடல் வரிகள் போல

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே  

அவர் அன்றே ஞானம் பெற்று விட்டார். நாம் இன்னும் ஞானத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அதன் எல்லா பிறப்புகளின் (முன்ஜென்ம)  நினைவுகளும் அடி மனதில் (subconscious mind ) இருக்கும்.  நாம் உறங்கும் போது நமக்கு வரும் கனவுகளை பற்றி சிந்தித்து இருக்கிறீர்களா? அதில் எத்தனை முகம் நமக்கு தெரிந்த முகம்? அதில் எத்தனை இடம் தெரிந்த இடம் ?  தெரியாத முகங்களும் அவர்களுடன் நாம் வாழ்வதும் தெரியாத இடங்கள் மிக துல்லியமான வீடு காடு கடல் என எப்படி நாம் காண முடியும்?

இதை பற்றி நான் என் தோழி ஒருவரோடு விவாதித்து கொண்டிருந்த போது அவர் சொன்னார் மைதிலி எனக்கும் முற்பிறப்பில் நம்பிக்கை இருக்கிறது ஆனால் அது ஏன் நமக்கு ஞாபகம் வருவதில்லை என்பதற்கு (justification) நியாயப்படுத்த எதாவது கரணம்  இருக்கிறதா  என்று கேட்டார்.
















இருக்கிறது என்று சொன்னேன். நாம் சில கனவுகள் வரும் போது அதிலும் நம் அன்பிற்கு உட்பட்டவர் யாரேனும் இறந்து போகும் கனவுகளோ அல்லது நமக்கே ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ நிஜத்தில் ஏற்பட்டது போல தாங்க முடியா வலியும் வேதனையும் நமக்கு வரும். அது கனவு என்றுணர்ந்து  அதிலிருந்து மீழவே நமக்கு சில நாட்கள் பிடிக்கும். அதை பற்றியே சிந்தித்து கொண்டிருப்போம். ஒரு வேளை  நமக்கு எல்லா ஜென்ம நினைவுகளும் வந்தால் நாம் வாழவே முடியாது. நாம் பட்ட துயரங்கள், இறந்து பிரிந்த உறவுகள், துடித்த தருணங்கள், ஏமாற்றியவர்கள். நம்மால் எவரையும் மன்னிகவோ மறக்கவோ முடியாது.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நம்முடைய ஆன்மா ஒவ்வொரு பிறப்பிலும் நினைவுகளை சேகரிக்கிறது ஆனால் அவை ஒவ்வொரு ஜனனத்திலும் மறைத்து அடிமனதில் ஒளித்து வைக்கப்படுகிறது. சில நினைவுகள் நமக்கு கனவாக வெளிப்படுகிறது. சிலவை நம்மால் உணர மட்டுமே முடிகிறது. இதற்க்கு எடுத்து காட்டு நாம் உறவகளை விட நாம் எங்கயோ சந்தித்த ஒரு நொடியில் நண்பர்களானவர்கள் மற்றும்  நாம் அறியாத சிலர் மேல் காண்பிக்கும் அளவுகடந்த பரிவு.



















நாம் ஆழ்ந்து உறங்கும் போது தெளிவான கனவுகள் (lucid dreams ) மூலம் நம் முற்பிறப்புகள்  பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று ஆராய்ட்சி ஆளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த பாகத்தில் இதை பற்றியும் எழுதுகிறேன். இன்னும் பல விவாதங்களும் செய்யலாம்.

பி.கு : நான் இங்கு முன் ஜென்மங்களை பற்றி பேச வரவில்லை அதனால் சுருக்கமாக கூறி இருக்கிறேன். ஆன்மாவின் பயணத்தில் ஆன்மா ஒவ்வொரு ஜனந்த்திலும் அதிக பரிமாணத்தை  (reaches higher dimension ) அடைகிறது.


                               



Monday, August 3, 2015

ஆன்மாவின் பயணம் - பாகம் ஓன்று






ஆன்மா பலினமற்றது ஜாதி மதம் அற்றது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. இந்த ஆன்மா ஒரு உடலை போர்த்திக்கொள்ளும் போது  தான் அது பாலினமுள்ள  மனிதனாகவோ மிருகமாகவோ பறவையாகவோ மரம் செடி கொடியாகவோ  உருபெருகிறது. எல்லா ஆன்மாக்களும் பல பிறவிகள் ஆண்பாலாகவும் பெண்பாலாகவும் பிறப்பு எடுத்து பரம்பொருளை சென்றடைகிறது. ஞனப்பானை என்ற கவிதையில்  பூந்தானம் என்ற மலையாள கவிஞர் சொல்லுவது போல "எத்ர  ஜென்மம் மலத்தில் கழிஞ்சதும் எத்ர  ஜென்மம் ஜலத்தில் கழிஞ்சதும் எத்ர ஜென்மங்கள் மண்ணில் கழிஞ்சதும் எத்ர  ஜென்மங்கள் மரங்களாய் நின்னதும் எத்ர  ஜென்மங்கள் மரிச்சு நடந்னதும் எத்ர   ஜென்மங்கள் மிருகங்கள் பசுக்களாய்" பல பல ஜென்மங்கள்.




முக்தி என்பதை அடையும் வரை மீண்டும் மீண்டும் எதோ ஒரு தாயின் கருவறையில்  ஆன்மா  ஜனிக்கிறது. பிறக்கும் போதும் நாம் ஏதும் கொண்டு வருவதில்லை இறக்கும் போதும் நாம் ஏதும் கொண்டு போக முடியாது . அவரவர் கர்மாக்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ஞானம் வளர சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் அமையும். அம்மாதிரியான சூழ்நிலைகளில் பக்குவப்பட்டு எல்லா பற்றுகளையும் துறக்கும் போது ஆன்மா முக்தி அடைகிறது.  பற்று என்பது நான் எனது என்ற எண்ணங்கள்.  



எல்லா  பிறவிகளிலும் மனித பிறவி சிறந்தது. ஏனென்றால் மனித பிறவி அடைந்தவுடன் நாம் சிந்தனைக்கு ஏற்ப நடக்க கூடிய சுதந்திரம் நம் ஆன்மாவிற்கு கிடைக்கிறது. எத்தனையோ பிறவிகள் காத்து இருந்து தான் நமக்கு மனிதப்பிறவி கிடைக்கிறது. இனியும் எத்தனையோ மனிதப்பிறப்புகள் எடுக்கவேண்டி இருக்கிறது. இந்த மனித பிறவியில் துன்பங்களுக்கும்  இன்பங்களுக்கும்  மாறி மாறி நாம்  உட்படுத்தப்படுகிறோம். நாம் நம்முடைய பற்றுகளை கொஞ்சம் கொஞ்சமாக துறக்க கற்றுக்கொள்கிறோம்.



நம்மிடையே புதிய ஆன்மாக்களும் பழைய ஆன்மாக்களும் உண்டு. பழைய ஆன்மாக்களை கண்டறிய முடியும். அவர்கள் பற்றற்றவர்களாகவும் அளவுகடந்த  ஞானம் உள்ளவர்களாகவும் நான் எனது என்ற அகம்பாவம் இல்லாதவர்களாகவும் யாரையும் அடிமை படுத்தாமல் சமமாக நடத்துபவர்களாகவும் பேராசை இல்லாதவர்களாகவும் பொறுமை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகள் செய்வர்.




எதோ ஒரு சமயம் நமது அனுபவத்திற்கு  ஏற்ப நமது ஆன்மா விழித்து கொள்கிறது. நம் உடல் வெறும் ஒரு சட்டை, நமது உடைமைகளும் உறவுகளும்  எதுவும் நமக்கு சொந்தமில்லை என்றும் சீக்கிரமே அழிந்து விடும் என்றும் புரிந்து கொள்கிறோம். எல்லா உயிரினத்தோடும் அன்பு செலுத்த தொடங்கி விடுகிறோம்.  நம்மை நாமே கேள்வி கேட்க தொடங்குகிறோம். நான் யார்? நான் ஏன் இங்கே பிறந்தேன்?  நான் எதற்காக பிறந்தேன்? நான் எங்கே போய்  சென்றடைவேன் ? நான்  யாருக்கும்  கட்டுப்பட்டவன்/வள்?  நான் தாயா, தந்தையா, மகனா, மகளா, மனைவியா, கணவனா? இப்படி எந்த உறவிற்கும் நாம் பொருந்தாதது போலும் ஆண் பெண் பாகுபாடு இன்றியும் சிந்திக்க தொடங்கி விட்டிருந்தீர்களானால் நீங்கள் அதாவது உங்கள் ஆன்மா விழிப்படைய தொடங்கி விட்டர்கள் என்று அர்த்தம்......................




                                                                                                                         (தொடரும் )