Wednesday, March 10, 2010

எனக்குப்பிடித்த பத்துப்பெண்கள் (தொடர் பதிவு)


எனக்குப்பிடித்த
பத்துப்பெண்கள்... தொடர் பதிவுக்கு என்னையும் ஒரு பதிவாளராக மதித்து அழைத்த சித்ரா சாலமனுக்கு நன்றி..


இந்த பதிவின் விதிமுறைகள்..
* உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
*வரிசை முக்கியம் இல்லை.,
*ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும், இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.

என்னை கவர்ந்தவர்களும்... நான் பார்த்து வியந்தவர்களும் இந்திய பெண்களாக இருக்க வேண்டுமென்பதில்லையே..

இந்த நூற்றாண்டிலும் முட்டி மோதி எப்படியாவது முன்னேற வேண்டும் என்று தத்தளித்து கொண்டிருக்கும் பெண்களே !!! சில / பல நூற்றாண்டுகளுக்கு முன் பெண்ணடிமை தலை விரித்துஆடிகொண்டிருந்த காலத்திலும் முன்னேறிய இவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்??
  1. கவிதை : கானா - இவள் 12 ஆம் நூற்றாண்டில் பெங்காலில் வாழ்ந்த ஒரு கவிஞர், வான சாஸ்திரத்திலும் மேதையாக இருந்த்தாள். இவளது கணவன் கணிதம் மற்றும் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கிய வராஹமிஹிரா . கணவனை விட மிக துல்லியமாக வானசாஸ்திரம் கணித்ததனால் நாக்கு துண்டிக்கபட்டவள். நாக்கு துண்டிக்கப்பட்டப்பின்னும் கானா வசன் (கானாவின் வாக்குகள் ) என்ற பெயரில் கவிதைகளும் விழிப்புணர்ச்சி வருத்தும் கருத்துக்களும் எழுதினாள்.
  2. புலமை: அவ்வை - கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று நமக்குபோதித்தவர். உலக இன்பங்களில் இடுபாடு வேண்டாம் என்று திருமணம்வெறுத்து இறைவன் அருளால் வயோதிக கோலம் பூண்டு உலக மக்களுக்கு எளிய பாடல்கள் மூலம் நன்நெறி புகட்டினார். இவரோடு சேர்ந்து நினைவுக்கு வருபவர் கே.பி.சுந்தராம்பாள்.
  3. மருத்துவம்: மிராண்டா ஸ்டூஆர்ட்( Dr.ஜேம்ஸ் பாரி )ஆண் வேடமிட்டு 1812 ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவ கலூரியில் பட்டம் பெற்றார். பெண்களுக்கு அப்போது கல்லூரியில் இடம் இல்லை. ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் பல நாடுகளிலும் சேவை செய்தார். ஆணாகவே வாழ்ந்தாள். அவர் இறந்த பிறகு அவர் உடலை சுத்தம்செய்த பெண்மணியே அவர் ஆணல்ல பெண் என்று கண்டுபிடித்தார்.. எத்தனை வைராக்கியம் இருந்தால் அவர் 56 வருடங்கள் ஆணாக வாழ்ந்திருப்பார்..
  4. அறிவியல்: மேரி க்யூரி - குடும்பமே அறிவியல் அராயிச்சியில் இறங்கினால் அவர்கள் வீட்டு கழிவறையிலும் சில நோபல் பரிசுகள் இருக்குமாம்.. போலந்தில் தாயும் மகளும் சேர்ந்து மூன்று நோபல் பரிசுகளை வென்றெடுத்தனர். மன்யா ஸ்கோலடோவஸக 1867ல் போலந்தில் பிறந்தார். வளர்ந்த பிறகு தான் பேரை மேரி என்று மாற்றிக்கொண்டார். முதல் நோபல் பரிசை 1906 ஆம் ஆண்டு பெற்றார். மீண்டும் 1911 ஆம் ஆண்டு மற்றொன்று. இவர் மகள் ஐரீன் 1935 ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசை தட்டிச்சென்றார். இவர்கள் வீட்டு ஆண்களும் சளைத்தவர்களல்ல.. எப்பேர்பட்ட வேதியல் குடும்பமப்பா.
  5. ஆன்மிகம்: மாதா அமிர்தானந்தமாயி - ஒரு சாதாரண மீனவ குடும்பத்தில் பிறந்தவர். ஒன்பது வயது வரையே பள்ளி சென்றவர். இன்று உலகம் முழுவதும் அம்மா.. அமமச்சி.. என்று அன்போடு அழைக்கப்படுபவர்.ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பது.. கல்வி கிடைக்காத குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது என்று பல சமூக சேவைகள் செய்பவர்..
  6. ஆசிரியர்: சாவித்திரி பாய் - இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். 1848 ஆம் ஆண்டு பூனாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் நிறுவினார். 1852ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பெண்களுக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார்.
  7. விமான ஓட்டுனர்: பிரேம் மாத்தூர் - இவர் இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டுனர். விமானம் ஓட்டும் பயிற்சி இருந்தும் அவருக்கு எந்த விமான கம்பெனியிலும் வேலை கொடுக்கவில்லை. பெண் ஓட்டுனர் என்றல் எங்கள் விமானத்திற்கு ஆள் வரமாட்டார்கள் என்று கேலி செய்தனர். மனம் சோர்ந்து தொழிலதிபர் ஜி. டி.பிர்லாவின் தனிப்பட்ட விமான ஓட்டுனராக பணியாற்றினார். 1951 ஆம் ஆண்டு டெக்கான் ஏர்லைன்ஸ் அவருக்கு முதல் வாய்ப்பை வழங்கியது.
  8. அரசியல்: இந்திரா காந்தி - இவருடைய அரசியல் திறமையை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.. நம் நாட்டின் ஒரே பெண் பிரதமர்..
  9. காவியப்பெண்: கண்ணகி - இவள் கற்புக்கரசியாய் இருந்ததல்ல என்னை வியக்க வைத்தது.. இவள் குற்றங்களை தட்டி கேட்டதும் துணிந்து மதுரையை எரித்ததும் தான் என் வியப்பு. சங்ககாலத்து பெண்களே இப்படி சித்தரிக்கப்பட்டிருக்கும் போது இக்காலத்து பெண் எப்படி இருக்கவேண்டும்??
  10. கல்வி: சந்திரமுகி பாசு : கல்கத்தா பல்கலை கழகத்தில் 1886 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்ற முதல் இந்திய பெண். இவருடைய இரு தங்கைகள் தான் கல்கத்தா மருத்துவ கல்லூரியில் முதன் முதலாக படித்த பெண்கள். எத்தனை முதல்கள் ஒரே குடும்பத்தில்..

Tuesday, March 2, 2010

முதன் முறையாக வெளியூருக்கு படிக்கபோகும் மாணவிகளுக்கு சில யோசனைகள்....

தோழிகளே, புதிதாக கல்லூரியில் சேரப்போகும் உங்களுக்கு நீங்கள் நினைத்த வண்ணம் வெற்றி அடைய முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நம்முடைய வாழ்கையில் பள்ளி கல்வி முடிந்து கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் அந்த தருணம் மிக முக்கியமானது. இது நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான ஒரு திருப்பு முனை. இதை நாம் நல்ல முறையில் எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டாமா?? உங்கள் கல்லூரி வாழ்கை சிறப்படைய ஒரு சர்வகலாசாலையில் பேராசிரியராக பணி புரியும் நான் என்னுடைய அனுபவங்களை வைத்து சில ஆலோசனைகளும் குறிப்புகளும் தரலாம் என்று நினைக்கிறேன். இந்த ஆலோசனைகள் மகளை கல்லூரியில் சேர்க்கப்போகும் தாய்மார்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கல்லூரியில் சேர்ந்து பெற்றோர்களுக்கு பிரியா விடை கொடுத்த பிறகு தான் தெரியும் வீட்டு நினைவால் ஏற்படும் துயரம் (ஹோம் ஸிக்னஸ் ) எவ்வளவு பாதிக்கும் என்று. இவை மட்டும் அல்லாமல் இதுவரை நமக்கு புரியாத / வந்திராத சில புதிய பிரச்சினைகளையும் தனியாக எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த பிரச்சினைகள் என்னென்ன அவற்றை எங்கனம் எதிர்கொள்ள வேண்டும் என்று கல்லூரியில் சேரும் முன்பே நாம் தெரிந்து கொண்டால் கல்லூரி வாழ்கை சுகமாகவும், சந்தோஷமாகவும் வெற்றியுடனும் முடியும்.

ஹோம் ஸிக்னஸ்
தாய் தந்தையரின் அரவணைப்பில் இத்தனை நாள் வளர்ந்து விட்டு திடீரென அவர்களை விட்டுப்பிரியும் போது ஏற்படும் பிரிவுத்துயரமே இது. ஆண்களை விட பெண்களையே இது அதிகமாக தாக்குகிறது. பெற்றோர்களை தற்காலிகமாக பிரிந்தாலும் நம் உள்மனது அதை ஏற்க மறுக்கும். நாம் எதற்காக இந்த கல்லூரியில் சேர்ந்தோம் என்பதே சில சமயம் மறந்து விடும். படிப்பை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விடலாம் என்று கூட தோன்றும். இப்படி பட்ட சூழ்நிலையில் உங்களுக்கு படிப்பின் மேல் உள்ள ஆர்வம் குறையும் இந்த நிலை புதிய நட்பு கிடைக்கும் வரையே என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

புது நட்பு
நீங்கள் புதிய சூழ்நிலைக்கு ஒத்துப்போகும் வரை, உங்களை எப்பொழுதும் எதாவது வேலைகளில் ஈடுபடுத்தி கொள்ளவேண்டும். தனிமையை தவிர்த்துக்கொள்ளுங்கள். தனிமை நமக்கு கிடைக்கும் போது, நாம் என்னென்ன இழந்தோம் என்று மனது அசை போடத்தொடங்கும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபாடு வரும். அதனால் உங்கள் படிப்பு மற்றும் அன்றைய வேலை முடிந்து விட்டால் உங்கள் விடுதி அறையில் தனித்திருக்காது நூல் நிலையத்திற்கு செல்லுங்கள் அல்லது பொது அறைகளில் தொலைக்காட்சி, விளையாட்டு மற்றும் செய்திதாள்களில் ஈடுபடுத்திகொள்ளுங்கள். அங்கு இருக்கும் மற்ற மாணவர்களிடம் பேச்சு கொடுங்கள். இது உங்களின் உரையாடல் திறமையை வளர்க்கும். ஏற்கனவே அங்கு தங்கி இருப்பவர்களிடம் இதன் மூலம் பரிச்சயம் கிடைக்கும். எவரையும் உடனடியாக நல்லவர் என்றோ தீயவர் என்றோ தீர்மானிக்க வேண்டாம். சில நாட்கள் கூட கழியட்டுமே.......

அன்புக்கு ஏக்கம் / காதல்
இருபாலாரும் படிக்கும் கல்லூரியானால் சகஜமாக பழகும் ஆண்கள் கூட அன்பு செலுத்துவதாக நினைத்து அவர்கள் மேல் ஈடுபாடு வரும். அவர் நல்லவரா கெட்டவரா என்று சிந்திக்க தவறி விடுவீர்கள். தீய நட்டபின் கைகளில் விழ வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய நட்பு உங்கள் வாழ்கையின் குறிக்கோளை தகர்த்து விடும். அதனால் நாம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். கல்லூரி படிப்பு முடியும் வரை காதல் வேண்டாமே.. காதலித்து விட்டீர்களா?? பொறுமையாக இருங்கள். நீங்கள் கற்க வந்த கல்விக்கு முதலிடம் கொடுங்கள். மிகுந்த பெண்களின் கல்வி இந்த காதலினால் பாதிக்க படுகிறது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு காதலே உலகம் என்று தனம்பிக்கையை இழந்து விடக்கூடாது. காதல் மற்றும் திருமணம் வெற்றியடையாத போது நீங்கள் கற்ற கல்வி தான் கைகொடுக்கும். கவனமாக இல்லையென்றால் வேறு அவமானங்களும் வந்து சேரும். சில பெண்கள் வெளியில்சொல்ல முடியாமல் தற்கொலை வரை சென்று விடுகிறார்கள். இது பல கல்லூரிகளில் நடக்கிறது. இந்தவிஷயம் எப்பொழுதும் உங்கள் மனதில் இருக்க வேண்டும்.

தன் கையே தனக்கு உதவி
பிறர் உதவி இன்றி, நம் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தெரிந்து கொள்ளுங்கள். பல வீடுகளில், பெண்களை பொத்தி பொத்தி வளர்த்திருப்பார்கள் பெற்றோர்கள். வங்கிக்கணக்கு துவங்குவது, அவசியமான பொருட்கள் வாங்க கடைகளின் விவரம், அவசியமுள்ள பஸ் ரூட்டுகள், அருகில் சொந்தக்காரர்கள் இருந்தால் அவர்களுடைய விலாசம், தொலைபேசி எண், நகல் எடுக்கும் நிலையங்கள்.. என்று இவற்றை பற்றி தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொன்றிற்கும் நாம் மற்றவரை சார்ந்திருந்தால் நேர விரயம் மட்டுமல்லாமல் சில சமயம் நட்பும் முறிந்து விடும்.

ஆண் சிநேகம்
கல்லூரி வாழ்வில், பல ஆண்களை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்கள் உங்கள் ஆசிரியராகவோ, சக மாணவனாகவோ, உங்கள் சகோதரர்களின் நண்பர்களாகவோ, உங்கள் தோழிகளின் சகோதரர்களாகவோ, உங்கள் டிபார்ட்மெண்டில் வேலை செய்பவராகவோ, பஸ்ஸில் தினமும் உங்களுடன் கூட பிரயாணம் செய்பவராகவோ வேண்டுமானாலும் இருக்கலாம். ஆண்களோடு பழகும் போது கவனமாக இருங்கள். இவர்களோடு பழகும் போது உங்கள் உள்ளுணர்வு சொல்லவதை கேளுங்கள். பெண்களுக்கு அவர்கள் உள்ளுணர்வு ஒரு நல்ல வழி காட்டி.உதவி கேட்க தயங்காதீர்கள்.

தன்னம்பிக்கை
யோகா மற்றும் உடற்பயிற்சி தினமும் செய்து வந்தால் உங்கள் மனதின் எண்ண சிதறல்களை ஒருமுகபடுத்தலாம். ஆரோக்யமாகவும் இருக்கலாம். பரிட்ச்சை நேரங்களில் உங்களின் உற்சசாகமின்மையை குறைத்து தன்னபிக்கையை உயர்த்தும். நீங்கள் கலூரியில் எதற்கு சேர்ந்தீர்கள் என்ற குறிக்கோளை ஒருபோதும் மறக்காதீர்கள். நீங்கள் வாங்கும் மார்குகள் மட்டும் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க போவதில்லை. உங்களை எப்பொழுதும் மற்றவரோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அது உங்களை நீங்களே அவமதிப்பதாக அர்த்தம். வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் இருந்தால் அது உதவாது. உங்களுக்குள் இருக்கும் மற்ற திறமைகளை வெளிக்கொண்டு வாருங்கள். உங்களுடன் படிப்பவர் வசதி உள்ளவராக இருக்கலாம், மிகுந்த அழகுள்ளவராக இருக்கலாம், விலையுயர்ந்த ஆடைகள் உடுத்தலாம், அழகு சாதன பொருட்கள் உபயோகிக்கலாம். அழகும், வசதியும், ஆடைகளும் ஒருவரின் வாழ்கையை ஒரு போதும் நிர்ணயிக்கப்போவதில்லை. உள்ளத்தின் அழகே உண்மையான அழகு. ஆகையால் நல்ல குணமுள்ளவராக நடந்து கொள்ளுங்கள். இயல்பாகவே உங்களை மற்றவர்களுக்கு பிடிக்கும்.

வெற்றி உங்கள் கையில்
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் வைத்திருக்கும் தொடர்பு. உங்கள் வசதியை பொறுத்து அவர்களுடன் தினமும் ஒரு முறையோ அல்லது வாரம் ஒருமுறையோ தொடர்பு கொண்டு உங்கள் கல்லூரியில் நடக்கும் விஷயங்களையும்,உங்கள் பிரச்சனைகளையும் தெருவித்து அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று கொள்ளுங்கள் அவர்களின் அன்பும் அரவணைப்பும் உங்களை வழிநடத்தி கல்லூரி வாழ்கையை வெற்றி பெற வைக்கும். உங்களின் கவனத்தை சிதற வைக்கும் காரணங்களை தெளிவாக புரிந்து கொண்டால், அதற்கு ஏற்ற தீர்வு காணும் வழி முறைகளை கண்டு, வெற்றி பெறலாம். கல்லூரி வாழ்க்கையை இனிமையாக மாற்றி கொள்ளலாம்.