Tuesday, April 27, 2010

முகம்.........

சென்ற வாரம்.... முகம் என்ற வார்த்தையை முதல் வார்த்தையாக கொண்டு கவிதைகள் எழுத முகப்புத்தகத்தில் (Facebook), பல முகங்களில் ஒரு முகமாக இயங்கும் , "கவிதை முகம்" கவியரங்கம் அழைப்பு விடுத்திருந்தது...


அதில் பங்கெடுத்த எனது கவிதை (கவிதையா என்பதில் எனக்கே சந்தேகம்...) இதோ....... இங்கே உங்களுக்காக...முகம்.........முகம்...மனிதனின் மர்ம அங்கி..
உனக்கு ஒரு முகம் எனக்கு ஒரு முகம்..
எத்தனை வித முகங்கள் இவ்வுலகத்திலே...
பால் வடியும் முகம்.. உள்ளே நஞ்சு..
சிரிக்கும் முகம்.. உள்ளே வெறுப்பு..
கனிவான முகம்.. உள்ளே குரூரம்..
திருப்தியான முகம்.. உள்ளே பேராசை..
உறுதியான முகம்.. உள்ளே பலவீனம்..
எல்லாமே பொய் முகங்கள்...
எதற்கு இந்த ஏமாற்று ??
சொந்த முகத்தை தொலைத்துவிட்டு
ஏன் போலி முகங்களோடு அலைகிறோம்??
நம்பியவர்கள் எமாறத்தானே??
உள்ளத்தை சீராக்குவோம்...
முகங்கள் அதை பிரதிபலிகட்டும்..

xxx

Thursday, April 15, 2010

பொறியியல் படிக்க உங்கள் பிள்ளை தயாரா என்று தெரிந்து கொள்ளுங்கள்...

கொஞ்சம் கவனியுங்கள் !!! பாகம்-II

வாசகர்களே, கவனிக்கவும்.. சென்ற பாகத்தில் நான் பொறியியல் கல்லூரியில் சேருவதே தவறு என்று எங்கும் கூறவில்லை. +2 பாசாகும் எல்லா பிள்ளைகளாலும் இலகுவாக படிக்க முடியாது என்று தான் சொல்லி இருந்தேன். ஆர்வமில்லா பிள்ளைகளை இன்ஜினியரிங் சேர்த்து விடாதீர்கள் (Don't force them to study engineering if they don't have any interest in the subject). இந்த பாகத்தில் ஏன் எல்லா பிள்ளைகளாலும் அதில் வெற்றி அடைய முடிவதில்லை என்று பார்க்கலாம்.

எல்லா முன்னணி கல்லூரிகளிலும் மொத்தம் உள்ள சீட்டுகளில் 50% மாணவர்கள் சராசரிக்கும், சராசரிக்கு மேலும் இருப்பார்கள். இவர்களுக்கு மிகுதியாக எந்த பிரச்சினையும் இருப்பதில்லை. மீதி 50 % மாணவர்கள் கதை சோகத்தில் தான் முடிவடைகிறது. இதில் கோர்ஸ் கைவிட்டு செல்பவர், தோற்று தோற்று மீண்டும் பெற்றோருக்காக முயற்சிப்பவர், தீய வழிகளில் செல்பவரும் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவரும் அடங்குவர்.முன்னணி கல்லூரிகளே இப்படியென்றால் சுயநிதி கல்லூரிகளை பற்றி கேட்கவே வேண்டாம்.
 • ஏன் இப்படி நடக்கிறது என்பதை பார்ப்போம்... பொறியியல் கல்வியின் மேல் உள்ள ஆர்வத்திற்கும் உங்கள் பிள்ளை வாங்கும் மார்க்குகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஏனெனில் +2 வில் அவர்கள் படிக்கும் பாடங்கள் மிக இலகுவானது. மனப்பாடம் செய்து கூட அவர்கள் மார்க் வாங்கி விடுவார்கள் / இருக்கலாம். இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது .. அவர்களுக்கு கணிதத்திலும் (Maths ) இயற்பியலிலும் (Physics ) எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதையே. வீட்டில் பிள்ளைகளின் படிப்பிற்காக நேரம் செலவிடும் பெற்றோர்களுக்கு இதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
 • பொறியியல் கல்வி +1,+2 மாதிரி எளிதாக இருக்கப்போவதில்லை.. எல்லா பாடங்களும் சிக்கலான கணிதத்தையும், கருத்துக்களையும் (complex concepts) அடிப்படையாக கொண்டிருக்கும். சிக்கலான கருத்துக்களை ஆசிரியர் சொல்லி கொடுக்கும் போது புரிந்து கொள்ளவும், ஆசிரியர் துணை இல்லாது தானாகவே அறிந்து கொள்ளவும் ஆர்வம் இருக்க வேண்டும். மனப்பாடத்துக்கு இங்கே இடம் இல்லை. பல சமயங்களில் ஆசிரியர் துணை இல்லாமலேயே படிக்க வேண்டி இருக்கும். பரீட்சையிலும் கேள்விகள் இப்படியே வரும். ஒழுங்காக புரிந்தவர்களுக்கு மட்டுமே பதில் எழுத முடியும்.
 • சில பெற்றோர்கள் இன்னும் கூட்டல், கழித்தல்,பெருக்கல் மற்றும் வகுத்தல் மட்டும் தெரிந்திருந்தால் எல்லா கணக்குகளையும் போட்டு விடலாம் என்று நினைக்கின்றனர். இவை மட்டும் சார்ந்திருப்பதல்ல இன்ஜினியரிங் பாடங்கள் . இங்கே எந்த பிரிவை எடுத்தாலும் எல்லாம் complex (சிக்கலான) and imaginary (கற்பனை) தான் from Calculus , Differential Equations, Statistics to Transforms (Fourier, Laplace etc.) வரை . எந்த பாடத்தை(subject) எடுத்துக்கொண்டாலும்.. அதிலுள்ள concepts மேலே சொல்லப்பட்ட கணிதத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். இவைகள் புத்திசாலி பிள்ளைகளுக்கு கூட ஒரு சவாலாகவே இருக்கும்.
 • இவை அல்லாது, மாணவர்கள் தங்கள் கருத்துக்களையும் பதில்களையும் கூச்சமில்லாமல் தெளிவாக சொல்லவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிறர் உதவி இல்லாமல் சுயமாக சிந்திக்க தெரிய வேண்டும். ஆசிரியர்களிடமோ அல்லது சக நண்பர்களிடமோ தங்கள் சந்தேகங்களை எந்த வித சங்கோஜமும் இல்லாமல் கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். இதுவும் என்னுடைய அனுபவத்தில் சில பிள்ளைகளுக்கு ஒரு சவாலாகவே இருக்குது.
இவை ஏதுவும் கவனிக்காமல் பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்தாயிற்று. இனி அந்த பிள்ளைகளை தொடர்ந்து கவனிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
 • கணிதத்திலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் இல்லா மாணவர்கள் முதலில் இருந்தே ஆசிரியர்கள் நடத்தும் படங்களை புரிந்து கொள்ள முடியாது. நாட்கள் செல்ல செல்ல இவர்கள் ஆசிரியர்கள் மேல் குற்றம் சாட்ட தொடங்குவார்கள். ஆசிரியர் சரியாக சொல்லி தரவில்லை.. பாடம் ரொம்ப கடினம் என்று தங்களுக்கு தானே சொல்லி ஆறுதல் அடைந்து கொள்வார்கள். சிறிது நாட்களுக்கு பின் இவர்களுக்கு எதுவுமே புரியாது.
 • பெரும்பாலான மாணவர்கள் முதல் வருடம் அதிக கவனம் செலுத்தாவிட்டாலும் எப்படியாவது பாஸ் பண்ண வாய்ப்பு இருக்கிறது. ஏன் என்றால் முதல் வருட பாடங்கள் +2 வின் extension ஆக இருக்கும். மூன்றாம் செமஸ்டர் துவங்கி எல்லா பாடங்களும் கடினமாகிவிடும். இதனால் எல்லா பிள்ளைகளின் படிப்பிலும் முதலில் ஒரு இறக்கம் வரும் பின்பு சிலர் சுதாகரித்து கொண்டு எழுந்து விடுவார்கள். சிலர் ஒரே அடியாக விழுந்து விட நேரிடும். முதல் வருஷத்திலேயே அரியர்ஸா?? பின் கேட்கவே வேண்டாம்.. மூட்டையின் கனம் வருடந்தோறும் கூடிக்கொண்டே இருக்கும். " +2 ல நல்லா படிச்ச புள்ளை இப்ப என்ன ஆச்சுன்னு தெரியல.. அவங்க வாத்தியார்கள் சரியாக பாடம் சொல்லி கொடுப்பதில்லை.. சரியாக மார்க் போடுவதில்லை" என்று சில பெற்றோர்கள் கடைசி வரை சொல்லிகொண்டிருப்பார்கள்.. இதற்க்கு பெற்றோர்களே.... உங்களை தவிர யாரும் பொறுப்பில்லை.
 • இந்த சராசரிக்கு கீழ் புரிதல் உள்ள பிள்ளைகளுக்கு சராசரிக்கு மேல் புரிதல் உள்ள பிள்ளைகளிடம் நட்பு கொள்ள இயல்பாகவே ஒருபோதும் முடியாது. இதனால் அவர்கள் தங்களை போல் உள்ளவர்களிடமே நட்பு வைக்க முடிகிறது. இது அவர்களை இன்னும் கீழே கொண்டு விடும். ஏனென்றால் அவர்களுக்குள் செய்யும் கருத்து பரிமாற்றம் உபயோகமற்றதாக இருக்கும்.
 • சிறிது நாட்களில் அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடும். கிளாஸ் கட் பண்ணுவது, பரீட்சையில் காப்பி அடிப்பது, பிட் கொண்டு செல்வது .. போன்றவற்றிற்கு தங்களை பழக்கபடுத்தி கொள்ளுவர். தங்கள் படிப்பில் முழு நம்பிக்கையையும் இழந்து விடுவர். அவர்களை சொல்லி குற்றமில்லை.. பாசாக வேண்டுமே.. வீட்டில் கேள்விகள் கேட்டு துளைப்பர்களே. இவர்களது கண்ணியமற்ற நடத்தை மற்றும் வாங்கும் மதிப்பெண்களை பார்த்து மீதி இருக்கும் ஒரு சில நல்ல நட்புகளும் விலகி சென்று விடுவர். இங்ஙனம் இவர்கள் கடைசியில் தனிமை படுத்தப்படுவார்கள்.
 • இவ்வாறு நடக்கும் போது இவர்களுக்கு படிப்பில் உள்ள நாட்டம் குறையும். இந்த சமயங்களில் தீய நட்புகளின் கைகள் விழுந்து விடுவார்கள். ஆண்களானால் கல்லூரி அரசியல், கலாட்டாக்கள், சிகிரட்டு, தண்ணி போன்ற தீய விஷங்களில் இறங்கி விடுவார்கள். பின் படிப்பு எங்கே... பெண்களானால் துவண்டு போய் நடை பிணங்களாக அலைவர் . சிலர் பகட்டுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு பெற்றோர்கள் தரவில்லை என்றால் கூட student loan எடுத்து ஊதாரித்தனமாக செலவழிப்பார்கள்.
உங்கள் செல்ல குழந்தயின் கனவை சிதைத்து அவர்கள் வாழ்வை திசைமாற்றியது யார்?? அவர்களேவா ?? அல்லது நீங்களா?? நன்றாக யோசித்து பார்த்தால் உங்களுக்கு பதில் கிடைக்கும்...

கடைசியில் டிகிரி கையில் கிடைக்காமல் போய்விடும் . இல்லையென்றால் பலவருடங்களாக எழுதி எழுதி குறைந்த அளவு மதிப்பெண்களே பெறுவார். ஒரு உபயோகமும் இருக்காது. சிலரை கல்லூரியிலிருந்தே நீக்கி விடுவார்கள். வெகு சில பெற்றோர்கள் மட்டுமே இதை சரியான நேரத்தில் உணர்ந்து பிள்ளைகளின் வாழ்வை சீர் செய்கிறார்கள்.


சரி எதோ ஆசையில் சேர்த்து விட்டாச்சு.. இனி என்ன செய்வது ?? அடுத்த பாகத்தில் சொல்ல முயற்ச்சிக்கிறேன்.

Wednesday, April 7, 2010

உங்கள் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்ப தயாராகி விட்டீர்களா??கொஞ்சம் கவனியுங்கள் !!! பாகம்-I


இந்த பதிவு தொடரில், வளர்ந்த பிள்ளைகளின் நிலைமை, பெற்றோர்களின் அறியாமை மற்றும் இன்ஜினியரிங் மோகம் பற்றி, இரண்டு அல்லது மூன்று பாகங்களாக எழுத முயற்சி செய்யப்போகிறேன். உங்களுடைய மேலான கருத்துக்களை பதிவு செய்தால் அடுத்த பாகங்களில் அதையும் சேர்த்து கொள்ள முயற்சிக்கிறேன்.

10 ஆவது, 12 ஆவது வகுப்பு படிக்கும் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்களுக்கு, அடுத்து அவர்களை என்ன படிக்க வைக்கிறது, எந்த கல்லூரியில் சேர்ப்பது? உள்ளூரிலா, வெளியூரிலா, வெளி நாட்டிலா? எந்த பாடத்திற்கெல்லாம் ட்யூஷனுக்கு அனுப்ப வேண்டும்? பொறியியல், மருத்துவம், IITJEE , SAT கோச்சிங் சென்டர் எங்க இருக்கு? பக்கத்துக்கு வீட்டு பையன் என்ன படிக்க போறான்? நண்பர் பொண்ணு எந்த காலேஜ்ல படிக்கிறா..?? அதற்கு எவ்வளவு பணம் செலவாகும்? என்று தகவல் சேகரிக்க தொடங்கி விடுவார்கள். எந்த சப்ஜெக்ட் படிச்சா உடனே வேலை கிடைக்கும் ?? இதுக்கு மேல பல வீடுகளில்... நம்ம புள்ளைங்க என்னத்த படிச்சு கிழிக்க போறாங்களோ?? எத்தன மார்க் கிடைக்குமோ..?? நமக்கு நல்ல பேரு வங்கி தருவாங்களோ?? ( இவங்க நல்ல படிச்சாங்களோ இல்லையோ இவங்க பிள்ளைகள் கட்டாயம் படிச்சாகணும்.. இல்லைண்ணா வீட்டுல ரண களம் தான்......).

சில வீடுகள்ல இந்த சமயத்தில் தான் தெய்வ பக்தி ததும்பி வழியும். கோவிலுக்கு அடிக்கடி போறது, தினமும் காலை மாலை மறக்காம பூஜை பண்ணறது, பிள்ளையாரோட பேரம் பேசறது, விரதம், வேண்டுதல்கள்.. அப்பப்பா!!. அப்பாக்கள் எல்லாம் ரொம்ப கண்டிக்க தொடங்கிவிடுவாங்க. வீட்டுக்குள்ள நுழையும் போதெல்லாம் பிள்ளைகள் புத்தகமும் கையுமாக இருக்கணும். . ( தந்தை குலங்கள் குடி, சிகிரெட்டு, ஊர்சுத்துதல், வேண்டாத டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றில் ஈடுபட்டு இருப்பார்கள்). மாட்டை அடிப்பது போல் அடித்து படிக்க வைக்கும்/புத்தி சொல்லும் தந்தைகளை பார்த்ததுண்டு (இது நம் தமிழகத்தின் சிறப்பு அம்சம்) . சிலர், விதிவிலக்காக நல்ல புரிதலுடன் இருக்கிறார்கள்.

தாய்குலங்கள், பாசத்துடன் பிள்ளைகளுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து போடுவாங்க.. வாயில ஊட்டி வேற விடுவாங்க.. ஏன்னா அப்ப கூட, படிக்கிற நேரம் வீணாக போய் விடக் கூடாதாம். சிலரோ, நேர் எதிர். கண்ணில் படும் போதெல்லாம் பிள்ளைகளை படிக்குமாறு திட்டி கொண்டே இருப்பார்கள். இப்படி பாடாய் படுத்தியதால் எனக்கு தெரிந்த ஒரு பையன் தூங்கி கொண்டிருக்கும் போது, யாரவது தட்டினால் கூட உடனே தலையணையை எடுத்து மடியில் வைத்து படிக்க தொடங்கிவிடுவான். அந்தோ பரிதாபம். இதுல புருஷன் பொண்டாட்டிக்குள்ள கருத்து வேறுபாடு வேற !! மொத்தத்தில் ஒரே குழப்பம்... வீட்டில் சண்டை சச்சரவுகள். இது தேவையா???

பெற்றோர்கள் எல்லோரையும் ஓன்று திரட்டி ஒரு மீட்டிங் வச்சு... உங்கள் பிள்ளைகளை பொறியியல் கல்லூரியில் சேர்க்க விருப்பம் உள்ளவுங்க கை தூக்குங்கன்னு சொன்னா.. எல்லா கையும் உயரும். ஏன்னு கேட்டா.. படிச்சு முடிச்ச உடனே ஏதாவது ஒரு வேலை கிடைச்சுடும்னு சொல்வாங்க.. இப்ப எல்லாம் நிறைய சுய நிதி கல்லூரிகள் (self financing colleges) இருப்பதால் பாசானா போதும் பணம் கொடுத்தாவது சீட் வாங்கி விடலாம் என்பது அவர்கள் எண்ணம்.

அடுத்தது மருத்துவம். அதற்கு சில கைகள் மட்டும் தான் உயரும் .. ஏனென்றால், அது அறிவு ஜீவிகளுக்கு உள்ள படிப்புன்னு எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை தான்.. நிறைய செலவழித்து படித்தும், மேல் படிப்பு இல்லாமல் பெரிதாக மருத்துவத்தில் முன்னேறி வர முடியாது, நிறைய உடனே சம்பாதிக்க முடியாது என்ற எண்ணங்கள் கூட பலருக்கு உண்டு.

மற்ற பட்ட படிப்புகளுக்கு B.A , B.Sc, B.Com. etc.. யாருமே கை தூக்க மாட்டாங்க. அதெல்லாம் படிச்சா எங்க வேலை கிடைக்கும்... அலைந்து திரிய வேண்டும் என்பது அவர்கள் கணிப்பு. எவ்வளவு தெளிவா யோசிக்கிறாங்க பாருங்க.

இப்படியாக, தங்களுடைய பிள்ளைகள் என்ன கோர்ஸ் படிக்கணுமுன்னு தீர்மானிப்பது பெற்றோர்களே . பிள்ளைகளுக்கு தான் என்ன படிக்க வேண்டும் என்று தீர்மானிக்க நமது நாட்டில், பல வீடுகளில் உரிமை இல்லை. பிள்ளைகள் வெறும் கைப்பாவைகளாகவே நடத்தப்படுகிறார்கள்.

பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க இவர்கள் ஆட வேண்டும். ஆடினால் ஏதாவது incentive கொடுப்பார்கள் அதில் முக்கிய பங்கு வகிப்பது கம்ப்யூட்டர் கேம்ஸ். இது குழந்தைகளை இன்னும் கெடுக்கிறது என்று அவர்களுக்கு புரிவதில்லை. எல்லா தரப்பட்ட மாணவர்களாலும் இது போன்ற பெற்றோர்களின் திணிப்பை தாங்கிக்கொள்ள முடியுமா என்றால்..... நிச்சயமாக முடியாது.

பெற்றோர்களே... உங்களின் தலையீடு, உடுத்தும் துணியிலிருந்து, உண்ணும் உணவு, தலை முடி வெட்டுவது, என்ன TV ப்ரோக்ராம் பார்ப்பது, யார் யார் நண்பர்கள், எப்போ எழுவது, எப்போ கழிப்பறை உபயோகிப்பது வரை போய் விடுகிறது. இது உங்களுக்கே அராஜகமாக தெரியவில்லை. இது தொடர்ந்து அவர்களது திருமண வாழ்கை வரை சென்று... அவனை /அவளை நிலைகுலைய செய்து விடுவார்கள். நீங்கள் ஒரு குரங்காட்டியாகவே மாறி விடுகிறீர்கள். இப்போது தெரிகிறதா பிள்ளைகள் ஏன் தன் சொந்தக்காலில் நிற்க தொடங்கிய உடன் உங்களை கண்டு கொள்வதில்லை என்று?? போதுண்டா சாமின்னு சொல்லிட்டு தலைமறைவாகி விடுவார்கள்.

நிறைய பெற்றோர்களுக்கு சொல்லப்பட்டிருப்பவை புரிவதில்லை. புரிந்து கொள்ளவும் முயற்சிப்பதில்லை. யாரு என்ன சொன்னா என்ன?? என் பையன் / பொண்ணு இப்படித்தான் இருக்கணும்/படிக்கணும் அப்படின்னு கோடு போட்டு வளர்க்கிறாங்க. போன்சாய் (Bonsai) மரங்களை போல.. கிளைகளை ஒடித்து, வேரை சுருட்டி, தண்டுகளை வளைத்து.. அவர்களின் மனங்களை முடமாக்கி.. ஆசைகளை அடக்கி........ என்னத்த சொல்ல? எல்லா பிள்ளைகளையும் ஒரே அச்சில் வார்த்த பொம்மைகள் போல் செய்ய முயற்ச்சிக்கின்றனர்.

ஒவ்வொரு பிள்ளைக்கும் மூளை செயல்படும் அளவு வித்யாசப்படும். அவர்கள் எண்ணங்கள், செயல்பாடுகள் எல்லாமே வித்யாசமாக இருக்கும். ஒவ்வொரு பிள்ளையும் தனித்தன்மையுடன் இருக்கும். அவர்களுக்கு விருப்பம் உள்ள துறையில் அவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். விருப்பமில்லா துறையில் அவர்களை ஓரளவுக்கு தான் தள்ள முடியும். அளவுக்கு மீறி தள்ளினால் கீழே விழுந்திடுவாங்க. அப்புறம் அவர்களால் வாழ்க்கையில் எழும்பவே முடியாது.

பெற்றோர்களுக்கு, கால் போன போக்கிலே பிள்ளைகளை அனுப்பாமல் பார்த்து வளர்ப்பதற்கும், அவர்கள் ஆசைகளை, திறமைகளை புரிந்து கொண்டு வளர்ப்பதற்கும் வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும்.

உலகம் மாறிவிட்டது.. நீங்கள் மட்டும் இன்னும் மாறாமல் ஏன் இருக்கிறீர்கள்? எல்லா துறைகளிலும் முன்னேற வழி இருக்கின்றன. ஒரு Engineer மட்டும் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்ற நிலை இல்லை.

இப்படி பொறியியல் மோகம் பிடுத்து தள்ளி விட்ட குழந்தைகளின் கதி என்ன...??
அடுத்த பாகத்தில் காணலாம்...

இந்த பதிவை எனக்காக எடிட் செய்தவர் - அன்புத்தோழி சித்ரா..

Wednesday, March 10, 2010

எனக்குப்பிடித்த பத்துப்பெண்கள் (தொடர் பதிவு)


எனக்குப்பிடித்த
பத்துப்பெண்கள்... தொடர் பதிவுக்கு என்னையும் ஒரு பதிவாளராக மதித்து அழைத்த சித்ரா சாலமனுக்கு நன்றி..


இந்த பதிவின் விதிமுறைகள்..
* உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
*வரிசை முக்கியம் இல்லை.,
*ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும், இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.

என்னை கவர்ந்தவர்களும்... நான் பார்த்து வியந்தவர்களும் இந்திய பெண்களாக இருக்க வேண்டுமென்பதில்லையே..

இந்த நூற்றாண்டிலும் முட்டி மோதி எப்படியாவது முன்னேற வேண்டும் என்று தத்தளித்து கொண்டிருக்கும் பெண்களே !!! சில / பல நூற்றாண்டுகளுக்கு முன் பெண்ணடிமை தலை விரித்துஆடிகொண்டிருந்த காலத்திலும் முன்னேறிய இவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்??
 1. கவிதை : கானா - இவள் 12 ஆம் நூற்றாண்டில் பெங்காலில் வாழ்ந்த ஒரு கவிஞர், வான சாஸ்திரத்திலும் மேதையாக இருந்த்தாள். இவளது கணவன் கணிதம் மற்றும் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கிய வராஹமிஹிரா . கணவனை விட மிக துல்லியமாக வானசாஸ்திரம் கணித்ததனால் நாக்கு துண்டிக்கபட்டவள். நாக்கு துண்டிக்கப்பட்டப்பின்னும் கானா வசன் (கானாவின் வாக்குகள் ) என்ற பெயரில் கவிதைகளும் விழிப்புணர்ச்சி வருத்தும் கருத்துக்களும் எழுதினாள்.
 2. புலமை: அவ்வை - கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று நமக்குபோதித்தவர். உலக இன்பங்களில் இடுபாடு வேண்டாம் என்று திருமணம்வெறுத்து இறைவன் அருளால் வயோதிக கோலம் பூண்டு உலக மக்களுக்கு எளிய பாடல்கள் மூலம் நன்நெறி புகட்டினார். இவரோடு சேர்ந்து நினைவுக்கு வருபவர் கே.பி.சுந்தராம்பாள்.
 3. மருத்துவம்: மிராண்டா ஸ்டூஆர்ட்( Dr.ஜேம்ஸ் பாரி )ஆண் வேடமிட்டு 1812 ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவ கலூரியில் பட்டம் பெற்றார். பெண்களுக்கு அப்போது கல்லூரியில் இடம் இல்லை. ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் பல நாடுகளிலும் சேவை செய்தார். ஆணாகவே வாழ்ந்தாள். அவர் இறந்த பிறகு அவர் உடலை சுத்தம்செய்த பெண்மணியே அவர் ஆணல்ல பெண் என்று கண்டுபிடித்தார்.. எத்தனை வைராக்கியம் இருந்தால் அவர் 56 வருடங்கள் ஆணாக வாழ்ந்திருப்பார்..
 4. அறிவியல்: மேரி க்யூரி - குடும்பமே அறிவியல் அராயிச்சியில் இறங்கினால் அவர்கள் வீட்டு கழிவறையிலும் சில நோபல் பரிசுகள் இருக்குமாம்.. போலந்தில் தாயும் மகளும் சேர்ந்து மூன்று நோபல் பரிசுகளை வென்றெடுத்தனர். மன்யா ஸ்கோலடோவஸக 1867ல் போலந்தில் பிறந்தார். வளர்ந்த பிறகு தான் பேரை மேரி என்று மாற்றிக்கொண்டார். முதல் நோபல் பரிசை 1906 ஆம் ஆண்டு பெற்றார். மீண்டும் 1911 ஆம் ஆண்டு மற்றொன்று. இவர் மகள் ஐரீன் 1935 ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசை தட்டிச்சென்றார். இவர்கள் வீட்டு ஆண்களும் சளைத்தவர்களல்ல.. எப்பேர்பட்ட வேதியல் குடும்பமப்பா.
 5. ஆன்மிகம்: மாதா அமிர்தானந்தமாயி - ஒரு சாதாரண மீனவ குடும்பத்தில் பிறந்தவர். ஒன்பது வயது வரையே பள்ளி சென்றவர். இன்று உலகம் முழுவதும் அம்மா.. அமமச்சி.. என்று அன்போடு அழைக்கப்படுபவர்.ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பது.. கல்வி கிடைக்காத குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது என்று பல சமூக சேவைகள் செய்பவர்..
 6. ஆசிரியர்: சாவித்திரி பாய் - இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். 1848 ஆம் ஆண்டு பூனாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் நிறுவினார். 1852ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பெண்களுக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார்.
 7. விமான ஓட்டுனர்: பிரேம் மாத்தூர் - இவர் இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டுனர். விமானம் ஓட்டும் பயிற்சி இருந்தும் அவருக்கு எந்த விமான கம்பெனியிலும் வேலை கொடுக்கவில்லை. பெண் ஓட்டுனர் என்றல் எங்கள் விமானத்திற்கு ஆள் வரமாட்டார்கள் என்று கேலி செய்தனர். மனம் சோர்ந்து தொழிலதிபர் ஜி. டி.பிர்லாவின் தனிப்பட்ட விமான ஓட்டுனராக பணியாற்றினார். 1951 ஆம் ஆண்டு டெக்கான் ஏர்லைன்ஸ் அவருக்கு முதல் வாய்ப்பை வழங்கியது.
 8. அரசியல்: இந்திரா காந்தி - இவருடைய அரசியல் திறமையை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.. நம் நாட்டின் ஒரே பெண் பிரதமர்..
 9. காவியப்பெண்: கண்ணகி - இவள் கற்புக்கரசியாய் இருந்ததல்ல என்னை வியக்க வைத்தது.. இவள் குற்றங்களை தட்டி கேட்டதும் துணிந்து மதுரையை எரித்ததும் தான் என் வியப்பு. சங்ககாலத்து பெண்களே இப்படி சித்தரிக்கப்பட்டிருக்கும் போது இக்காலத்து பெண் எப்படி இருக்கவேண்டும்??
 10. கல்வி: சந்திரமுகி பாசு : கல்கத்தா பல்கலை கழகத்தில் 1886 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்ற முதல் இந்திய பெண். இவருடைய இரு தங்கைகள் தான் கல்கத்தா மருத்துவ கல்லூரியில் முதன் முதலாக படித்த பெண்கள். எத்தனை முதல்கள் ஒரே குடும்பத்தில்..

Tuesday, March 2, 2010

முதன் முறையாக வெளியூருக்கு படிக்கபோகும் மாணவிகளுக்கு சில யோசனைகள்....

தோழிகளே, புதிதாக கல்லூரியில் சேரப்போகும் உங்களுக்கு நீங்கள் நினைத்த வண்ணம் வெற்றி அடைய முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நம்முடைய வாழ்கையில் பள்ளி கல்வி முடிந்து கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் அந்த தருணம் மிக முக்கியமானது. இது நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான ஒரு திருப்பு முனை. இதை நாம் நல்ல முறையில் எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டாமா?? உங்கள் கல்லூரி வாழ்கை சிறப்படைய ஒரு சர்வகலாசாலையில் பேராசிரியராக பணி புரியும் நான் என்னுடைய அனுபவங்களை வைத்து சில ஆலோசனைகளும் குறிப்புகளும் தரலாம் என்று நினைக்கிறேன். இந்த ஆலோசனைகள் மகளை கல்லூரியில் சேர்க்கப்போகும் தாய்மார்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கல்லூரியில் சேர்ந்து பெற்றோர்களுக்கு பிரியா விடை கொடுத்த பிறகு தான் தெரியும் வீட்டு நினைவால் ஏற்படும் துயரம் (ஹோம் ஸிக்னஸ் ) எவ்வளவு பாதிக்கும் என்று. இவை மட்டும் அல்லாமல் இதுவரை நமக்கு புரியாத / வந்திராத சில புதிய பிரச்சினைகளையும் தனியாக எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த பிரச்சினைகள் என்னென்ன அவற்றை எங்கனம் எதிர்கொள்ள வேண்டும் என்று கல்லூரியில் சேரும் முன்பே நாம் தெரிந்து கொண்டால் கல்லூரி வாழ்கை சுகமாகவும், சந்தோஷமாகவும் வெற்றியுடனும் முடியும்.

ஹோம் ஸிக்னஸ்
தாய் தந்தையரின் அரவணைப்பில் இத்தனை நாள் வளர்ந்து விட்டு திடீரென அவர்களை விட்டுப்பிரியும் போது ஏற்படும் பிரிவுத்துயரமே இது. ஆண்களை விட பெண்களையே இது அதிகமாக தாக்குகிறது. பெற்றோர்களை தற்காலிகமாக பிரிந்தாலும் நம் உள்மனது அதை ஏற்க மறுக்கும். நாம் எதற்காக இந்த கல்லூரியில் சேர்ந்தோம் என்பதே சில சமயம் மறந்து விடும். படிப்பை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விடலாம் என்று கூட தோன்றும். இப்படி பட்ட சூழ்நிலையில் உங்களுக்கு படிப்பின் மேல் உள்ள ஆர்வம் குறையும் இந்த நிலை புதிய நட்பு கிடைக்கும் வரையே என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

புது நட்பு
நீங்கள் புதிய சூழ்நிலைக்கு ஒத்துப்போகும் வரை, உங்களை எப்பொழுதும் எதாவது வேலைகளில் ஈடுபடுத்தி கொள்ளவேண்டும். தனிமையை தவிர்த்துக்கொள்ளுங்கள். தனிமை நமக்கு கிடைக்கும் போது, நாம் என்னென்ன இழந்தோம் என்று மனது அசை போடத்தொடங்கும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபாடு வரும். அதனால் உங்கள் படிப்பு மற்றும் அன்றைய வேலை முடிந்து விட்டால் உங்கள் விடுதி அறையில் தனித்திருக்காது நூல் நிலையத்திற்கு செல்லுங்கள் அல்லது பொது அறைகளில் தொலைக்காட்சி, விளையாட்டு மற்றும் செய்திதாள்களில் ஈடுபடுத்திகொள்ளுங்கள். அங்கு இருக்கும் மற்ற மாணவர்களிடம் பேச்சு கொடுங்கள். இது உங்களின் உரையாடல் திறமையை வளர்க்கும். ஏற்கனவே அங்கு தங்கி இருப்பவர்களிடம் இதன் மூலம் பரிச்சயம் கிடைக்கும். எவரையும் உடனடியாக நல்லவர் என்றோ தீயவர் என்றோ தீர்மானிக்க வேண்டாம். சில நாட்கள் கூட கழியட்டுமே.......

அன்புக்கு ஏக்கம் / காதல்
இருபாலாரும் படிக்கும் கல்லூரியானால் சகஜமாக பழகும் ஆண்கள் கூட அன்பு செலுத்துவதாக நினைத்து அவர்கள் மேல் ஈடுபாடு வரும். அவர் நல்லவரா கெட்டவரா என்று சிந்திக்க தவறி விடுவீர்கள். தீய நட்டபின் கைகளில் விழ வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய நட்பு உங்கள் வாழ்கையின் குறிக்கோளை தகர்த்து விடும். அதனால் நாம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். கல்லூரி படிப்பு முடியும் வரை காதல் வேண்டாமே.. காதலித்து விட்டீர்களா?? பொறுமையாக இருங்கள். நீங்கள் கற்க வந்த கல்விக்கு முதலிடம் கொடுங்கள். மிகுந்த பெண்களின் கல்வி இந்த காதலினால் பாதிக்க படுகிறது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு காதலே உலகம் என்று தனம்பிக்கையை இழந்து விடக்கூடாது. காதல் மற்றும் திருமணம் வெற்றியடையாத போது நீங்கள் கற்ற கல்வி தான் கைகொடுக்கும். கவனமாக இல்லையென்றால் வேறு அவமானங்களும் வந்து சேரும். சில பெண்கள் வெளியில்சொல்ல முடியாமல் தற்கொலை வரை சென்று விடுகிறார்கள். இது பல கல்லூரிகளில் நடக்கிறது. இந்தவிஷயம் எப்பொழுதும் உங்கள் மனதில் இருக்க வேண்டும்.

தன் கையே தனக்கு உதவி
பிறர் உதவி இன்றி, நம் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தெரிந்து கொள்ளுங்கள். பல வீடுகளில், பெண்களை பொத்தி பொத்தி வளர்த்திருப்பார்கள் பெற்றோர்கள். வங்கிக்கணக்கு துவங்குவது, அவசியமான பொருட்கள் வாங்க கடைகளின் விவரம், அவசியமுள்ள பஸ் ரூட்டுகள், அருகில் சொந்தக்காரர்கள் இருந்தால் அவர்களுடைய விலாசம், தொலைபேசி எண், நகல் எடுக்கும் நிலையங்கள்.. என்று இவற்றை பற்றி தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொன்றிற்கும் நாம் மற்றவரை சார்ந்திருந்தால் நேர விரயம் மட்டுமல்லாமல் சில சமயம் நட்பும் முறிந்து விடும்.

ஆண் சிநேகம்
கல்லூரி வாழ்வில், பல ஆண்களை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்கள் உங்கள் ஆசிரியராகவோ, சக மாணவனாகவோ, உங்கள் சகோதரர்களின் நண்பர்களாகவோ, உங்கள் தோழிகளின் சகோதரர்களாகவோ, உங்கள் டிபார்ட்மெண்டில் வேலை செய்பவராகவோ, பஸ்ஸில் தினமும் உங்களுடன் கூட பிரயாணம் செய்பவராகவோ வேண்டுமானாலும் இருக்கலாம். ஆண்களோடு பழகும் போது கவனமாக இருங்கள். இவர்களோடு பழகும் போது உங்கள் உள்ளுணர்வு சொல்லவதை கேளுங்கள். பெண்களுக்கு அவர்கள் உள்ளுணர்வு ஒரு நல்ல வழி காட்டி.உதவி கேட்க தயங்காதீர்கள்.

தன்னம்பிக்கை
யோகா மற்றும் உடற்பயிற்சி தினமும் செய்து வந்தால் உங்கள் மனதின் எண்ண சிதறல்களை ஒருமுகபடுத்தலாம். ஆரோக்யமாகவும் இருக்கலாம். பரிட்ச்சை நேரங்களில் உங்களின் உற்சசாகமின்மையை குறைத்து தன்னபிக்கையை உயர்த்தும். நீங்கள் கலூரியில் எதற்கு சேர்ந்தீர்கள் என்ற குறிக்கோளை ஒருபோதும் மறக்காதீர்கள். நீங்கள் வாங்கும் மார்குகள் மட்டும் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க போவதில்லை. உங்களை எப்பொழுதும் மற்றவரோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அது உங்களை நீங்களே அவமதிப்பதாக அர்த்தம். வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் இருந்தால் அது உதவாது. உங்களுக்குள் இருக்கும் மற்ற திறமைகளை வெளிக்கொண்டு வாருங்கள். உங்களுடன் படிப்பவர் வசதி உள்ளவராக இருக்கலாம், மிகுந்த அழகுள்ளவராக இருக்கலாம், விலையுயர்ந்த ஆடைகள் உடுத்தலாம், அழகு சாதன பொருட்கள் உபயோகிக்கலாம். அழகும், வசதியும், ஆடைகளும் ஒருவரின் வாழ்கையை ஒரு போதும் நிர்ணயிக்கப்போவதில்லை. உள்ளத்தின் அழகே உண்மையான அழகு. ஆகையால் நல்ல குணமுள்ளவராக நடந்து கொள்ளுங்கள். இயல்பாகவே உங்களை மற்றவர்களுக்கு பிடிக்கும்.

வெற்றி உங்கள் கையில்
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் வைத்திருக்கும் தொடர்பு. உங்கள் வசதியை பொறுத்து அவர்களுடன் தினமும் ஒரு முறையோ அல்லது வாரம் ஒருமுறையோ தொடர்பு கொண்டு உங்கள் கல்லூரியில் நடக்கும் விஷயங்களையும்,உங்கள் பிரச்சனைகளையும் தெருவித்து அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று கொள்ளுங்கள் அவர்களின் அன்பும் அரவணைப்பும் உங்களை வழிநடத்தி கல்லூரி வாழ்கையை வெற்றி பெற வைக்கும். உங்களின் கவனத்தை சிதற வைக்கும் காரணங்களை தெளிவாக புரிந்து கொண்டால், அதற்கு ஏற்ற தீர்வு காணும் வழி முறைகளை கண்டு, வெற்றி பெறலாம். கல்லூரி வாழ்க்கையை இனிமையாக மாற்றி கொள்ளலாம்.

Sunday, February 7, 2010

ஆசை பேய்(கள்)

(The same thoughts that every one of you have - Just a reminder)

உங்கள்ள பேய்கள நம்புறவுங்க எத்தனை பேருங்க இருக்கீங்க ?? இந்த காலத்துல நிறைய பேர் பேய்கள நம்பறதில்லை... வெகு சிலபேருக்கே அதுல நம்பிக்கை இருக்கு.. விஞ்ஞான வளர்ச்சி அப்படி. ஆனா உண்மை என்ன தெரியுமா ?? பேய்கள் இருக்கு... இருக்கும்.. இருந்துகிட்டே இருக்கும். நீங்க நம்பி தான் ஆகணும். நம்ம கூடவே அதுவும் வாழ்ந்துகிட்டிருக்கு. மனிதர்கள் இருக்கிற வரை பேய்களும் இருக்கும்.

இந்த பேய் ஆசை
என்ற பேர்ல மனிதர்களுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருக்கு... ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல பேய்கள் குடியிருக்கு... இந்த பண்டோரா பாக்ஸ் கத தெரிஞ்சவுங்களுக்கு இது புரியும். ஆசை மட்டுமே பல வேஷங்கள் போட்டு மனுஷன கொடுமை படுத்திகிட்டிருக்கு. சாப்பாடு இல்லாதவன் சாப்பாட்டுக்கு ஆசை படலாம். உறங்க ஒரு இடமும் இல்லாதவன் இடத்துக்கு ஆசை படலாம். இது மாதிரியே உடுக்க உடை, கற்க கல்வி, அன்புக்கு ஒரு குடும்பம், படித்த படிப்பிற்கு ஒரு வேலை...இவ்வளவு தானேங்க ஒருத்தனுக்கு வேணும். ஆனா அப்படியா ஆசபடுறாங்க...

என்ன சார்/மேடம் கொடும இது..?? மேல சொன்ன எல்லாமே இருந்தும் இந்த உலகத்துல நிறைய பேரை ஆசை பேய்கள் கூடி அடிச்சுகிட்டிருக்கு. யாராவது கவனிச்சிங்களா?? ஆடம்பரமான வாழ்கை, பெரிய பதவி, அரண்மனை போன்ற வீடு, விலை உயர்ந்த உடைகள்... கட்டின மனைவிய விட (மகள் வயதில்) அழகான பெண்... பெற்ற பிள்ளைகளை கூட விட்டு வைப்பதில்லை இவர்கள். தன்னால் நிறைவேற்ற முடியாத ஆசைகளை குழந்தைகள் மேல் ஏற்றுகிறார்கள். குழந்தைகளை பாரம் சுமக்கும் கழுதை ஆக்கி விடுகிறார்கள்.

இதுக்கு
காரணம் பழைய காலத்திலிருந்தே உலவி வருகிற மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை எனும் பேய்கள். வயசு வித்யாசம் பார்க்காம இந்த பேய்கள் மனிதர்களுக்குள் குடியேறி விடுகிறது. இந்த பேய்களோட கூட அவங்க சகோதர சகோதரிகளும் ( போட்டி, பொறமை, கர்வம், அடுத்தார் மேல்பழி ) சேர்ந்தே குடி எறிடுராங்க. இதனால பல குடும்பங்களில் நிம்மதி இல்லாமல் போச்சு. சந்தோஷமான வாழ்கைண்ணா என்னண்ணே யாருக்கும் தெரியல. தெரிஞ்சுக்கவும் நிறைய பேர் விருப்பப்பாடல. முழி பிதுங்கி.. ஓட்ட முடியாத வண்டியா வாழ்கைய நினைச்சு ஒட்டிகிட்டிருக்காங்க.

உங்கள்ளுக்குள் இருக்கிற இந்த பேய்கள ஒட்டணுமா ?? வேண்டாமா?? நீங்களே சொல்லுங்க.. இந்த பேய்கள வரம் வாங்கிவிட்டு வந்தவை.. ஓட்ட முடியாது ஆனா கட்டுபடுத்த முடியும் (ஆணி அடிச்சு மரத்தில் வைக்கிற மாதிரி ). ஒவ்வொரு மனிதனும் ஒரு பண்டோரா பாக்ஸ் மாதிரி தான். பெட்டியை அடைத்து வைத்திருக்கிற வரை அவனுக்கு நல்லது. பெட்டியை திறந்து விட்டால் அதிலுள்ள பேய்கள் வெளியே வந்து அவனது வாழ்கையை சிதைத்து விடும்.

தயவு செய்து உங்களிடம்
இருக்கும் பேய்களை தைரியமாக நீங்களே அடக்கி வையுங்கள் வெளியே உலவ விட்டு விடாதீர்கள் !!!

நன்றி.

பின் குறிப்பு.
பண்டோரா பாக்ஸ் பற்றி தெரியாதவுங்க உடனே google பார்த்து தெரிஞ்சிக்குங்க.