Thursday, May 14, 2015

மேக ஓவியம்


விரித்த  ஒற்றை வான வரை திரையில்....
நித்தம் இரவு பகலாக
பல்லாயிரம் ஓவியங்கள் ...
மேக வர்ணம் பூசி
காற்று தூரிகை கொண்டு
கறுப்பு  வர்ணத்தையும்
வெள்ளை வர்ணத்தையும்
குழைத்து அழகாக தீட்டுகிறான்.....

அந்த மாய ஓவியன் யார் ??
ஓன்று மட்டும் தெளிவாக தெரியுது
வெயிலடிக்கும் போது அவன்
அயர்ந்து ஓய்வெடுக்கிறான்....
மழை பெய்யும் போது
சுறுசுறுப்பாக ஓவியங்களை
தீட்டி தள்ளுகிறான்....





Monday, March 2, 2015

சூரியனையயே சிறைவைத்தேன்

அழகனே !! சூரியனே!!

தினமும் நான் உன்னை நமஸ்கரிக்கிறேன் (சூரிய நமஸ்காரம் )
எப்பொழுதம் நீ  எனக்கு முன்பே எழுந்து இருப்பாய்
உன்னை  கண்ணோடு கண் பார்க்க முடிவதில்லை
அவ்வளவு காட்டம் உன் கண்களில்

இன்று கிழே விழுந்து எழும் போது தான் கவனித்தேன்
கண்முன்னே உன் பிம்பம் என் வீட்டு பளிங்கு தறையில்
இப்போது உன் கண்களை  நேராக பார்க்கமுடிகிறது
வெறும் பிம்பமாய் இருந்ததால்  உனக்கு  காட்டம் இல்லை
ஆனால் உன் ஆழகு மட்டும் ஏனோ குறையவில்லை

சட்டென்று ஒரு எண்ணம் உன்னை சிறை படுத்த.........
நினைத்தபடி சிறைப்படுதினேன் எப்படி தெரியுமா ?
ஒரு நொடியில் ஓடிச்சென்று என் கேமரா எடுத்தேன்
நீ எதிர்பாரத சமயம் உன் பிம்பத்தை படம் பிடித்தேன்
அதை கூட உன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை

நீ ஏன் உடனே மேகங்களின் உள்ளே மறைந்தாய்?
நிச்சயம் வெட்கத்தினால் இல்லை
விடவில்லையே நான் ...இதை அறிந்து தான் நீ
இன்னும் பிரகாசமாய்  வெளியில் வந்தாய்
உன் வெப்பத்தை ஏற்றி கோபித்தாய்

உன் பிம்பத்தை கூட பார்க்க முடியவில்லை
உன் கண்களில் அவ்வளவு உக்கிரம்
உலகத்தயே கட்டி இழுக்கும் உன்னை என்
சிறிய கேமரா  சிறை வைத்து விட்டேன் என்றா ?





Saturday, February 28, 2015

மழையும் தனிமையும்


ஒரு  அந்தி சாயும்  நேரத்தில்..........


வீட்டு முகப்பில் நின்றிருந்தேன்
சட்டென்று சோ என்ற  மழை கண்ணாடி துகள்களாய்
எங்கும் பனி மூட்டம் போலே அதனூடே சிறுவெளிச்சம்
சூரியனா?  சந்திரனா?  யாருடையது?
பறவைகளின் கீச்சு குரல் இசையாய் வீழ
தூரத்தில் மின்மினி பூச்சிகளாய்  ஒளி வீசும் வீடுகள்
மனிதர்கள் சுகமாய் பயமின்றி உறங்கும் கூடுகள்
ஒரு நொடியில்
சொர்க்க பிரதேசமாய் மாறியது
மழையின் சாரல்கள் அழகாய் தெறித்தது சிதறியது
இது கண்ணுக்கு மட்டுமே தெரியும் கவிதையா?
மழைத்துளிகளின் பதச்சுவடு   தெரியும் நடனமா?
மின்கம்பத்தில் இருந்து பறக்கும் தீ பொறிகள்
மழையை ஊக்குவிக்கும் கைதட்டல்களா ?

சில்லென்ற காற்று உடலை வருடும் போது
ஒரு சுகம் சட்டென தோன்றி மறைந்தது
எனையறியாது யாருமற்ற ஒரு ஏகாந்த நிலை
கண்களின் ஓரம் கசிந்த நீர் துளியாய்
என் தனிமையை உணர்திச்சென்றது !!!!






Monday, February 23, 2015

கண்ணாடி பிம்பம்

நான் சிரித்தால் சிரிக்கிறாய் தேவதையாக
நான் அழுதால் அழுகிறாய் சிறு குழந்தையாக
என் சோகம் உன் முகத்தில் தெரியும் 
என் சுகம் உன் உடலில் தெரியும்  
எனது உடையை நீ உடுத்துகிறாய் 
எனது சீப்பால் நீ தலை வாரிகொள்கிறாய் 
உன்னை பார்த்தேன் அங்கே..
நீயில்லை நான் நின்றிருந்தேன்.....  
   

Wednesday, March 23, 2011

மாணவர்கள் வெற்றிகரமாக பட்டம் பெற பெற்றோரின் பங்கு....

கொஞ்சம் கவனியுங்கள் !!! பாகம் -III

மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து முதல் செமெஸ்டர் / வருடம் முடிவடைந்திருக்கும் அல்லது முடியும் தருவாயில் இருக்கும். கடந்த பதிவுகளின் தொடர்ச்சி இது. சமயமின்மையே இப்பதிவு தாமதமானதற்கு காரணம்.

பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்து விடுவதோடு பெற்றவர்கள் கடமை முடிவதில்லை. அவர்கள் சரியான பாதையில் செல்கின்றனரா / ஒழுங்காக படிக்கின்றனரா என்று அடிக்கடி கவனித்துக்கொள்ள வேண்டும். சிறந்த முறையில் அவர்கள் பட்டம் பெற வேண்டாமா ?? அதற்கு நீங்களும் உதவுங்களேன்...

நான் சந்தித்த பல பெற்றோர்களே நான் இந்த பதிவை இட காரணம்.... பெற்றோர்கள் பல தரம் உண்டு அவற்றில் சில

1. படித்த சராசரி பெற்றோர்கள்.... (இவர்கள் பரவாயில்லை)

2. படித்த தந்தை.. மிக உயர்ந்த பதவி (நேரமின்மை). தாய் படிக்காதவர் அல்லது அதிக உலக அனுபவம் இல்லாதவர்.

3. படிக்காத தந்தை.. சொந்த தொழில்-வியாபாரம் செய்பவர் (நிறைய பணப்புழக்கம்)....

4. தந்தை தாய் இரண்டு பேரும் அதிகம் படிக்காதவர் (கண்மூடித்தனமாக பிள்ளை சொல்வதை நம்புவர்).

5. நகர வாசிகள் / கிராம வாசிகள் ( பந்தா... / அறியாமை)

6. வெளியூரில் / வெளிநாட்டில் இருப்பவர்கள் (தூரம் சிலருக்கு ஒரு குறை).

கல்லூரி மாணவர்கள் பெற்றோரின் அறியாமையும், பதவியையும், பணத்தையும், நேரமின்மையையும் துர் உபயோகம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அவை என்னென்ன??

1. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தந்தை (படிக்காத விவசாயி) என்னிடம் தன் மகன் 40 பாடங்களில் பெயில் ஆகி இருப்பதாக கூறி அழுதார். 6 மாசத்துக்கொரு முறை பரீட்சை நடத்துறாங்களே உங்க மகனை கேட்கலையா என்றேன். கேட்டோமே!! செமெஸ்டர் பரிட்சை நடக்கும் போது ஃபீஸ் வாங்கிப்போவான் ஆனால் ரிஸல்ட் எப்போ வரும் என்று கேட்டால் அதெல்லாம் நாலு வருஷம் கழிச்சு கோர்ஸ் முடியும் போது தான் தருவாங்கண்ணு சொல்லுவான்.. அப்படி இல்லையாங்க என்று பரிதாபமாக கேட்டார்.


2. மாணவர்கள் இரண்டாவது வருடத்தில் கால் வைத்தவுடன்... மிக மும்முரமாக ஒரு விஷயத்தில் இறங்கிவிடுவார்கள்... என்னண்ணு கேக்குறீங்களா?? பாங்க் லோன் வாங்க லெட்டர் தயாரிப்பதில் ( பெற்றோருக்கு தெரியாமல் தான்.... ) இந்த பணத்தை கொண்டு அவர்களது ஆடம்பரச்செலவுகள் (பைக், லாப்டாப், ஊர்சுத்தல், மற்றும் பல) நடத்தப்படும். படித்து முடிக்கும் வரை இது வீட்டுக்கு தெரிய வரவே வராது.

3. சில வீட்டில் (பண புழக்கம் அதிகமுள்ள) கேட்கும் போதெல்லாம் பணம் கொடுப்பதால் பொய் சொல்லி அல்லது மிரட்டி (செத்து போவேன், காலேஜ் போக மாட்டேன் என்றெல்லாம்..) வாங்கிச் செல்வர். சில மாணவர்கள் திருடக்கூட துணிந்து விடுவார்கள். எங்கள் கல்லூரியில் ஒரு மாணவன் தான் உபயோகிக்கும் கம்ப்பூட்டர் லாப் கம்பூட்டர்களையே பார்ட் பார்டாக கழட்டி விற்றுக்கொண்டிருந்தான். பெற்றோருக்கு எவ்வளவு தலைகுனிவு.

4. க்ளாஸ் கட்டடித்து வேறு கேளிக்கைகளில் ஈடுபடுவது மாணவர்களுக்கு ஜாலியான விஷயம்... இது ஓவராகிப்போனால் அட்டெண்டன்ஸ் குறைவால் பரிட்சை எழுதமுடியாமல் போய்விடும். இது பல பெற்றோர்களுக்கு தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது.....

5. மாணவர்கள் சேர்ந்து ஊர் சுற்றுவது (உள்ளூர் இல்லீங்க வெளியூர்). அவங்களே பஸ்/கார் அமர்த்தி செல்வார்கள். இது சில நேரம் உயிரை குடிக்கும் பயணங்களாகி முடிந்து விடும். தொலை தூரத்தில் இருக்கும் பெற்றோருக்கு இது கவனிக்க முடியாத ஒன்று.

இவற்றை தடுக்க சில வழி முறைகள்

1. கல்லூரியில் சேர்த்த முதல் நாளே தெளிவாக பாட திட்டம் பற்றிய “rules and regulations” தெரிந்து வைத்துக்கொள்ள் வேண்டும்.

2. ஓவ்வொரு வகுப்புக்கும் ஒரு Class coordinator (ஒரு ஆசிரியையோ அல்லது ஆசிரியரோ) இருப்பார். அவரே அந்த மாண்வர்கள் பட்டம் பெறும் வரை கவனித்து கொள்வர். அவருடைய போண் நம்பர் மற்று email id தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

3. அவரை மதம் ஒரு முறை தொலைபேசியிலோ/நேரிலோ அல்லது மின் அஞ்சல் வழியாகவோ தொடர்பு கொண்டு கல்லூரி விஷேஷங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

4. ஓவ்வொரு கல்லூரிக்கும் ஒரு இணயதளம் இருக்கும்.. அதை அடிக்கடி பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் கல்லூரிகளில் நடந்த, நடக்கும், மற்றும் நடக்கப்போகும் நிகழ்ச்சிகள், பயிற்ச்சித்திட்டங்கள், பரிட்சைகளின் அட்டவணை, பரிட்சை முடிவுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்கும். இணய தளம் இல்லையென்றால் மேலே சொல்லப்பட்டிருக்கும் மாத சந்திப்பின் போது தெரிந்து கொள்ள வேண்டும்.

5. காசு பணம் கேட்கும் போது யோசித்து தேவை அறிந்து கொடுக்க வேண்டும். வெளியூர்களுக்கு நண்பர்களோடு போக வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு பெற்றோர் அவர்களுடன் செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடு வைக்க வேண்டும்.

6. பிள்ளைகளின் நட்பு வட்டம் யார் யார் என்றும் அவரது, போன், மின்அஞ்சல் மற்றும் முகவரி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களையும் இடைக்கிடை தொடர்பு கொள்ள வேண்டும்.

7. தொடர்ந்து மார்க்கு குறைவாக வாங்குகிறார்களா... அப்படியானால் அவர்களுக்கு பாடம் சரியாக புரியவில்லை என்று அறிந்து கொண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை சந்தித்து பேசி Special care கொடுக்கச்சொல்ல்லாம்.

இல்லையேல் ட்யூசன் வைக்கலாம். முதலிலேயே இதை சரி செய்தல் சிறப்பு. அல்லது எப்போதும்... பரிட்சை எழுதிவிட்டு பாசாவோமா?? பெயிலாவோமா?? என்று பார்த்து பார்த்து காத்திருக்க வேண்டும்.

8. மாணவர்களுக்கு attendance குறித்துள்ள முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு எங்கள் கல்லூரியில் 75% இருந்தால் தான் பரிட்சை எழுத முடியும் இல்லாவிட்டால் அடுத்த வருடம் தான். இந்த attendance உங்க பிள்ளை எத்தனை நாள் நீங்க கட்டிக்கொடுத்த டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு போனான் என்பதை பொறுத்த்து இல்லை. அவன் ஒவ்வொரு பாடத்தில் எத்தனை மணி நேரம் அமர்ந்திருந்தான் என்பதை பொறுத்தது.

9. கடைசியாக உங்க செல்ல பிள்ளைக்கு கொஞ்சம் நல்ல புத்திமதிகளும்/ நன்னெறிகளும் (Ethics) சொல்லிக்கொடுங்க. நேர்மையாக வாழ்வதின் பலன்களையும் சொல்லுங்க. ஓவ்வொரு வருடமும் நிறைய மாணவர்கள் பரிட்சை ஹால்களில் பிடிபடுகிறார்கள். காப்பி/பிட்டு அடிக்க வித விதமான் முறைகள் கையாளுகிறார்கள். எப்படி காப்பி அடிக்கிறதுண்ணு ப்லான் போடுற சமயத்தில் அவங்க அழகாக படிக்கலாம்.

Tuesday, April 27, 2010

முகம்.........

சென்ற வாரம்.... முகம் என்ற வார்த்தையை முதல் வார்த்தையாக கொண்டு கவிதைகள் எழுத முகப்புத்தகத்தில் (Facebook), பல முகங்களில் ஒரு முகமாக இயங்கும் , "கவிதை முகம்" கவியரங்கம் அழைப்பு விடுத்திருந்தது...


அதில் பங்கெடுத்த எனது கவிதை (கவிதையா என்பதில் எனக்கே சந்தேகம்...) இதோ....... இங்கே உங்களுக்காக...



முகம்.........



முகம்...மனிதனின் மர்ம அங்கி..
உனக்கு ஒரு முகம் எனக்கு ஒரு முகம்..
எத்தனை வித முகங்கள் இவ்வுலகத்திலே...
பால் வடியும் முகம்.. உள்ளே நஞ்சு..
சிரிக்கும் முகம்.. உள்ளே வெறுப்பு..
கனிவான முகம்.. உள்ளே குரூரம்..
திருப்தியான முகம்.. உள்ளே பேராசை..
உறுதியான முகம்.. உள்ளே பலவீனம்..
எல்லாமே பொய் முகங்கள்...
எதற்கு இந்த ஏமாற்று ??
சொந்த முகத்தை தொலைத்துவிட்டு
ஏன் போலி முகங்களோடு அலைகிறோம்??
நம்பியவர்கள் எமாறத்தானே??
உள்ளத்தை சீராக்குவோம்...
முகங்கள் அதை பிரதிபலிகட்டும்..

xxx

Thursday, April 15, 2010

பொறியியல் படிக்க உங்கள் பிள்ளை தயாரா என்று தெரிந்து கொள்ளுங்கள்...

கொஞ்சம் கவனியுங்கள் !!! பாகம்-II

வாசகர்களே, கவனிக்கவும்.. சென்ற பாகத்தில் நான் பொறியியல் கல்லூரியில் சேருவதே தவறு என்று எங்கும் கூறவில்லை. +2 பாசாகும் எல்லா பிள்ளைகளாலும் இலகுவாக படிக்க முடியாது என்று தான் சொல்லி இருந்தேன். ஆர்வமில்லா பிள்ளைகளை இன்ஜினியரிங் சேர்த்து விடாதீர்கள் (Don't force them to study engineering if they don't have any interest in the subject). இந்த பாகத்தில் ஏன் எல்லா பிள்ளைகளாலும் அதில் வெற்றி அடைய முடிவதில்லை என்று பார்க்கலாம்.

எல்லா முன்னணி கல்லூரிகளிலும் மொத்தம் உள்ள சீட்டுகளில் 50% மாணவர்கள் சராசரிக்கும், சராசரிக்கு மேலும் இருப்பார்கள். இவர்களுக்கு மிகுதியாக எந்த பிரச்சினையும் இருப்பதில்லை. மீதி 50 % மாணவர்கள் கதை சோகத்தில் தான் முடிவடைகிறது. இதில் கோர்ஸ் கைவிட்டு செல்பவர், தோற்று தோற்று மீண்டும் பெற்றோருக்காக முயற்சிப்பவர், தீய வழிகளில் செல்பவரும் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவரும் அடங்குவர்.முன்னணி கல்லூரிகளே இப்படியென்றால் சுயநிதி கல்லூரிகளை பற்றி கேட்கவே வேண்டாம்.
  • ஏன் இப்படி நடக்கிறது என்பதை பார்ப்போம்... பொறியியல் கல்வியின் மேல் உள்ள ஆர்வத்திற்கும் உங்கள் பிள்ளை வாங்கும் மார்க்குகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஏனெனில் +2 வில் அவர்கள் படிக்கும் பாடங்கள் மிக இலகுவானது. மனப்பாடம் செய்து கூட அவர்கள் மார்க் வாங்கி விடுவார்கள் / இருக்கலாம். இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது .. அவர்களுக்கு கணிதத்திலும் (Maths ) இயற்பியலிலும் (Physics ) எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதையே. வீட்டில் பிள்ளைகளின் படிப்பிற்காக நேரம் செலவிடும் பெற்றோர்களுக்கு இதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
  • பொறியியல் கல்வி +1,+2 மாதிரி எளிதாக இருக்கப்போவதில்லை.. எல்லா பாடங்களும் சிக்கலான கணிதத்தையும், கருத்துக்களையும் (complex concepts) அடிப்படையாக கொண்டிருக்கும். சிக்கலான கருத்துக்களை ஆசிரியர் சொல்லி கொடுக்கும் போது புரிந்து கொள்ளவும், ஆசிரியர் துணை இல்லாது தானாகவே அறிந்து கொள்ளவும் ஆர்வம் இருக்க வேண்டும். மனப்பாடத்துக்கு இங்கே இடம் இல்லை. பல சமயங்களில் ஆசிரியர் துணை இல்லாமலேயே படிக்க வேண்டி இருக்கும். பரீட்சையிலும் கேள்விகள் இப்படியே வரும். ஒழுங்காக புரிந்தவர்களுக்கு மட்டுமே பதில் எழுத முடியும்.
  • சில பெற்றோர்கள் இன்னும் கூட்டல், கழித்தல்,பெருக்கல் மற்றும் வகுத்தல் மட்டும் தெரிந்திருந்தால் எல்லா கணக்குகளையும் போட்டு விடலாம் என்று நினைக்கின்றனர். இவை மட்டும் சார்ந்திருப்பதல்ல இன்ஜினியரிங் பாடங்கள் . இங்கே எந்த பிரிவை எடுத்தாலும் எல்லாம் complex (சிக்கலான) and imaginary (கற்பனை) தான் from Calculus , Differential Equations, Statistics to Transforms (Fourier, Laplace etc.) வரை . எந்த பாடத்தை(subject) எடுத்துக்கொண்டாலும்.. அதிலுள்ள concepts மேலே சொல்லப்பட்ட கணிதத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். இவைகள் புத்திசாலி பிள்ளைகளுக்கு கூட ஒரு சவாலாகவே இருக்கும்.
  • இவை அல்லாது, மாணவர்கள் தங்கள் கருத்துக்களையும் பதில்களையும் கூச்சமில்லாமல் தெளிவாக சொல்லவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிறர் உதவி இல்லாமல் சுயமாக சிந்திக்க தெரிய வேண்டும். ஆசிரியர்களிடமோ அல்லது சக நண்பர்களிடமோ தங்கள் சந்தேகங்களை எந்த வித சங்கோஜமும் இல்லாமல் கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். இதுவும் என்னுடைய அனுபவத்தில் சில பிள்ளைகளுக்கு ஒரு சவாலாகவே இருக்குது.
இவை ஏதுவும் கவனிக்காமல் பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்தாயிற்று. இனி அந்த பிள்ளைகளை தொடர்ந்து கவனிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
  • கணிதத்திலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் இல்லா மாணவர்கள் முதலில் இருந்தே ஆசிரியர்கள் நடத்தும் படங்களை புரிந்து கொள்ள முடியாது. நாட்கள் செல்ல செல்ல இவர்கள் ஆசிரியர்கள் மேல் குற்றம் சாட்ட தொடங்குவார்கள். ஆசிரியர் சரியாக சொல்லி தரவில்லை.. பாடம் ரொம்ப கடினம் என்று தங்களுக்கு தானே சொல்லி ஆறுதல் அடைந்து கொள்வார்கள். சிறிது நாட்களுக்கு பின் இவர்களுக்கு எதுவுமே புரியாது.
  • பெரும்பாலான மாணவர்கள் முதல் வருடம் அதிக கவனம் செலுத்தாவிட்டாலும் எப்படியாவது பாஸ் பண்ண வாய்ப்பு இருக்கிறது. ஏன் என்றால் முதல் வருட பாடங்கள் +2 வின் extension ஆக இருக்கும். மூன்றாம் செமஸ்டர் துவங்கி எல்லா பாடங்களும் கடினமாகிவிடும். இதனால் எல்லா பிள்ளைகளின் படிப்பிலும் முதலில் ஒரு இறக்கம் வரும் பின்பு சிலர் சுதாகரித்து கொண்டு எழுந்து விடுவார்கள். சிலர் ஒரே அடியாக விழுந்து விட நேரிடும். முதல் வருஷத்திலேயே அரியர்ஸா?? பின் கேட்கவே வேண்டாம்.. மூட்டையின் கனம் வருடந்தோறும் கூடிக்கொண்டே இருக்கும். " +2 ல நல்லா படிச்ச புள்ளை இப்ப என்ன ஆச்சுன்னு தெரியல.. அவங்க வாத்தியார்கள் சரியாக பாடம் சொல்லி கொடுப்பதில்லை.. சரியாக மார்க் போடுவதில்லை" என்று சில பெற்றோர்கள் கடைசி வரை சொல்லிகொண்டிருப்பார்கள்.. இதற்க்கு பெற்றோர்களே.... உங்களை தவிர யாரும் பொறுப்பில்லை.
  • இந்த சராசரிக்கு கீழ் புரிதல் உள்ள பிள்ளைகளுக்கு சராசரிக்கு மேல் புரிதல் உள்ள பிள்ளைகளிடம் நட்பு கொள்ள இயல்பாகவே ஒருபோதும் முடியாது. இதனால் அவர்கள் தங்களை போல் உள்ளவர்களிடமே நட்பு வைக்க முடிகிறது. இது அவர்களை இன்னும் கீழே கொண்டு விடும். ஏனென்றால் அவர்களுக்குள் செய்யும் கருத்து பரிமாற்றம் உபயோகமற்றதாக இருக்கும்.
  • சிறிது நாட்களில் அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடும். கிளாஸ் கட் பண்ணுவது, பரீட்சையில் காப்பி அடிப்பது, பிட் கொண்டு செல்வது .. போன்றவற்றிற்கு தங்களை பழக்கபடுத்தி கொள்ளுவர். தங்கள் படிப்பில் முழு நம்பிக்கையையும் இழந்து விடுவர். அவர்களை சொல்லி குற்றமில்லை.. பாசாக வேண்டுமே.. வீட்டில் கேள்விகள் கேட்டு துளைப்பர்களே. இவர்களது கண்ணியமற்ற நடத்தை மற்றும் வாங்கும் மதிப்பெண்களை பார்த்து மீதி இருக்கும் ஒரு சில நல்ல நட்புகளும் விலகி சென்று விடுவர். இங்ஙனம் இவர்கள் கடைசியில் தனிமை படுத்தப்படுவார்கள்.
  • இவ்வாறு நடக்கும் போது இவர்களுக்கு படிப்பில் உள்ள நாட்டம் குறையும். இந்த சமயங்களில் தீய நட்புகளின் கைகள் விழுந்து விடுவார்கள். ஆண்களானால் கல்லூரி அரசியல், கலாட்டாக்கள், சிகிரட்டு, தண்ணி போன்ற தீய விஷங்களில் இறங்கி விடுவார்கள். பின் படிப்பு எங்கே... பெண்களானால் துவண்டு போய் நடை பிணங்களாக அலைவர் . சிலர் பகட்டுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு பெற்றோர்கள் தரவில்லை என்றால் கூட student loan எடுத்து ஊதாரித்தனமாக செலவழிப்பார்கள்.
உங்கள் செல்ல குழந்தயின் கனவை சிதைத்து அவர்கள் வாழ்வை திசைமாற்றியது யார்?? அவர்களேவா ?? அல்லது நீங்களா?? நன்றாக யோசித்து பார்த்தால் உங்களுக்கு பதில் கிடைக்கும்...

கடைசியில் டிகிரி கையில் கிடைக்காமல் போய்விடும் . இல்லையென்றால் பலவருடங்களாக எழுதி எழுதி குறைந்த அளவு மதிப்பெண்களே பெறுவார். ஒரு உபயோகமும் இருக்காது. சிலரை கல்லூரியிலிருந்தே நீக்கி விடுவார்கள். வெகு சில பெற்றோர்கள் மட்டுமே இதை சரியான நேரத்தில் உணர்ந்து பிள்ளைகளின் வாழ்வை சீர் செய்கிறார்கள்.


சரி எதோ ஆசையில் சேர்த்து விட்டாச்சு.. இனி என்ன செய்வது ?? அடுத்த பாகத்தில் சொல்ல முயற்ச்சிக்கிறேன்.